Skip to main content

வடமாநிலத்தில் ஒரு தொகுதியும், தென்மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதால் ராகுல்காந்தியை நாடே போற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறது: கே.எஸ்.அழகிரி

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:   ‘’கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று ஏற்கனவே அறிக்கை மூலம் நான் வலியுறுத்தியதை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

 

r

 

அதேபோல, கேரளா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களும் தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று ராகுல்காந்தி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பது தென்மாநில மக்களை பெருமைப்படுத்துகிற நிகழ்வாகும். 

 

வயநாடு மக்களவை தொகுதி என்பது தமிழகத்தைச் சேர்ந்த நீலகிரி, தேனி மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராஜ் நகர், மைசூர் ஆகிய பகுதிகளின் எல்லைகளை ஒட்டி அமைந்திருப்பது மிகுந்த சிறப்புக்குரியதாகும். இந்த முடிவின் மூலம் இந்தியாவின் வடக்கையும், தெற்கையும் இணைக்கிற பாலமாக ராகுல்காந்தி அவர்கள் திகழ்வது வரலாற்றில் மிகுந்த போற்றுதலுக்குரிய முடிவாக கருதப்படும். தென்மாநில மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிற வகையில் அவரது முடிவு அமைந்திருக்கிறது.

 

காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி  வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க.வினர் கடுமையான விமர்சனத்தை எழுப்பியிருக்கிறார்கள். ஏற்கனவே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வதேரா, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டதை எவரும் மறந்திட இயலாது. அன்று இரண்டு தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிட்டதை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க.வினர் இன்று ராகுல்காந்தி  எடுத்த முடிவை விமர்சனம் செய்வதற்கோ, கருத்து கூறுவதற்கோ எந்த உரிமையும் கிடையாது. 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து  பிரியங்கா காந்தி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா ஆகிய இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வெற்றியை நோக்கி பீடுநடை போட்டு வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பெறுகிற வெற்றி, இந்திய அரசியலுக்கு திருப்பு முனையாக அமையப் போகிறது. இந்தச் சூழலில் வடமாநிலத்தில் ஒரு தொகுதியும், தென்மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என்பது இந்திய மக்களையும், நிலப்பரப்பையும் இணைக்கிற முயற்சியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற  ராகுல்காந்தியை நாடே போற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறது. அவரது முடிவு இந்திய மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’’

 

சார்ந்த செய்திகள்