
சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி பசுமை சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு இயந்திரங்கள் துரிதமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நிலத்தை இழக்கும் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும், நாளுக்கு நாள் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து வரும் நிலையில் விவசாயிகளை சமாதானப்படுத்தி நிலங்களை எதிர்க்கும் வேலையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் வரை ஈடுபட்டு வருகிறார்கள்,
இதில் ஒரு சிலர் தங்களது நிலங்களை ஒப்படைத்ததாக விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் உயிரே போனாலும் எங்களது விளை நிலங்களை கொடுக்க மாட்மோம் என உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் மனநிலை, போராடும் அமைப்புகளின் பின்னணி குறித்து விரிவான ஆய்வை செய்து வரும் மத்திய மாநில உளவுதுறை அதிகாரிகள், ஒரு பகீர் தகவலை வெளியிடுகிறார்கள்.
அதன்படி தற்போது நிலம் எடுப்பதற்கான அளவீடு மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக சாலை அமைக்க நிலத்தை எடுக்கும்போது மக்களின் போராட்ட வடிவம் மாறப்போகிறது. அப்போது தங்கள் நிலங்கள் பறிபோவதை எண்ணி மனமுடைந்து குடும்பத்தோடு பலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் மிகுந்த அபாயம் உள்ளது என உளவுத்துறை ஆய்வறிக்கை கூறுகிறது.
இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் சிறு, குறு விவசாயிகள் காலம் காலமாக அவர்களது பூர்வகுடியாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களது விவசாய நிலம் 8 வழிச்சாலைக்காக பறிபோவது மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு வேதனை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக பல குடும்பங்கள் துன்பத்தில் மூழ்கியுள்ளது. அப்படிப்பட்ட சாமானியர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்குள் அபாயம் நிலைதான் ஏற்பட்டுள்ளது.