தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகச் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்படி ஆவடியில் 13 செ.மீ. மழையும், அம்பத்தூரில் 13 செ.மீ. மழையும், திருவாலங்காட்டில் 11 செ.மீ. மழையும், செங்குன்றத்தில் 7.5 செ.மீ. மழையும், ஊத்துக்கோட்டையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (26.09.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (26.09.2024) காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் 35 விமானங்களின் சேவை பாதிப்படைந்தன. பெங்களூரு, மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு மற்றும் திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானத்தில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அதே சமயம் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சுரங்கப் பாதையில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அடுத்த ஓரிரு மணிநேரத்தில் மழைநீர் வடியும். மற்ற சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.