காட்டுமன்னார்கோவிலுக்கு உட்பட்ட கிராம பகுதிகளின் நீர் நிலைகளில் கடந்த சில நாட்களாக முதலைகள் தஞ்சமடைந்துவருகின்றன. முட்டம் வடக்கு ராஜன்வாய்க்கால், வடவாறு ஜீரோபாய்ண்ட், ம.ஆதனூர் உள்ளிட்ட பொதுமக்களின் புழக்கத்தில் இருக்கும் பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறிய முதலைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று வீராணம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியாகும் வெள்ளியங்கால் ஓடையில் எள்ளேரி பகுதி ஓடை கரையில் சுமார் ஆறு அடி முதலை, காலை வேளையில் வெயிலுக்காக படுத்துகிடந்தது. இதை பார்த்த அந்தப் பகுதி மக்கள், சிதம்பரம் வனத்துறை மற்றும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் அங்குவந்த வீரர்கள், முதலையை பிடிக்க முயன்றனர். அப்போது, முதலை தண்ணீருக்குள் நீந்தி சென்றுவிட்டது. இது பற்றி அந்தப் பகுதியில் மக்கள் கூறியதாவது; ஆண்டுதோறும் மழைக் காலங்களில் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுவதோடு கிராமத்தில் மேயும் ஆடுகளை வேட்டையாடிவருகிறது. இந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகளும் அவ்வபோது தனியார் நபர்களை வைத்து பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்கராமரி குளத்தில் விடுவது வழக்கம். இதனால், சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியில் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர் என்று தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாக நெய்வேலி பகுதியில் முதலைப் பண்ணை அமைத்து இருப்பதாக தெரிகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் முதலை பண்ணை அமைத்தால் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறும் முதலைகளை பிடித்து அப்புறப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.