சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (03/11/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தென் தமிழ்நாட்டையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டையில் இன்று (03/11/2021) மிக கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி அன்று சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி அன்று கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 7ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்." இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.