காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.
அதே சமயம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காணத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று (07.10.2024) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு. சங்கத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த முடிவும் எட்டப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அரசின் அறிவுறுத்தலின் படி போராட்டக்குழுவினரின் 14 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாம்சங் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதிலும் குறிப்பாகக் குளிர்சாதன வசதி கொண்ட ஐந்து பேருந்துகளை நிறுவத்தின் சார்பில் இயக்கப்பட்டு வந்தது. இன்று 108 பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர் யாரேனும் இறக்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இந்த மாதம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் உயர்த்தி தருவதாக என 14 கோரிக்கைகள் நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது.
எனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர், அரசின் கோரிக்கையை ஏற்று நாளை (08.10.2024) முதல் பணிக்குத் திரும்பக் கேட்டுக்கொள்கிறோம். எந்த பிரச்சனை என்றாலும் அரசு தீர்ப்பதற்குத் தயாராக உள்ளது. சாங்சங் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. அதனை இங்கு விவாதிக்க முடியாது” எனத் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா மற்றும் சி.வி. கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.