தமிழ்நாட்டில் கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு பெரிய அளவில் இருந்தது. குறிப்பாக, சென்னையில் அதீத கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போதும் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியபடியே இருக்கிறது.
இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை, தென் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதியால் வரும் நவம்பர் 25ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து செய்ய மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.