![Chance of heavy rain in 13 districts; Meteorological Centre](http://image.nakkheeran.in/cdn/farfuture/kz2deE8KCQCEg5UE_pf4arGx3y_muQDa4NI2GmVPw3k/1683543379/sites/default/files/inline-images/1_450.jpg)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் வரும் 10 ஆம் தேதி அது புயலாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் கனமழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலில் உருவான புயல் வரும் மே 11 ஆம் தேதி வடக்கு வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு நோக்கி நகரக்கூடும். மேலும் இது படிப்படியாக வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம்-மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும். தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.