அமைச்சர் தங்கமணி காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கவே இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எஸ் சின்ராஜ் சென்ற வாரத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது என்று கூறினார்.
இதை மறுத்த அமைச்சர் தங்கமணி, மணல் கொள்ளை எங்கே நடக்கிறது என்று சவால் விட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று நாமக்கல்லில் எம்.பி.சின்ராஜ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் ரோந்து சென்றார். அப்போது லாரிகளில் மணல் அள்ளுவதை பார்த்து பரிசோதனை செய்தார். அதில் நான்கு லாரிகளில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளை நடப்பதை உறுதி செய்து அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினார்.
போலீஸ் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து வாக்குவாதம் செய்த நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இதில் உள்ளவர்களை வழக்கு போட வேண்டும் என்றும் கூறினார். வேறு வழி இல்லாமல் போலீஸார் அந்த லாரிகளை சீஸ் செய்து வழக்குப் போட்டு உள்ளார்கள்.
இதுபற்றி கூறிய நாமக்கல் எம்பி சின்ராஜ், அமைச்சர் தங்கமணி மணல் கொள்ளை நடக்கவில்லை என்றார். ஆனால் நேரில் சென்று நான் ஆய்வு செய்ததில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இப்போது அமைச்சர் என்ன சொல்லப் போகிறார் அவர் பதவி விலக வேண்டும் என்றார்.