”அழகு முகம் மறைந்துவிட்டது” என ஸ்ரீதேவியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது.
ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளைப் பிம்பப்படுத்துகிறார். பலகோடிப் பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர்முகம்.
‘மூன்றாம் பிறை’யில் நான் எழுதிய நரிக்கதை பாடலைப் பாட வந்தபோது அவரை முதல்முறை பார்த்தேன். நானெழுதி அவர் கடைசியாகப் பாடி நடித்த புலி படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாகப் பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது.
அரைநூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலைப் பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்தியக் கலையுலகம் மறக்காது. ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரைக்கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.