கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக்குழு இன்று மாலை 4.30 மணிக்கு முதல்கட்ட ஆய்வை புதுக்கோட்டையிலிருந்து தொடங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் சென்னை வந்தடைந்தனர். அந்த குழுவில் நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி கபில், வேளாண்துறை இயக்குனர் ஸ்ரீவர்சவா, ஊரக வளர்ச்சிதுறை துணைச்செயலாளர் மாநிக்சந்த் பண்டிட், மின்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவுடன் சென்னை நீர்வளத்துறை அதிகாரிகள் ஹர்ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பொறியியல் மேற்பார்வையாளர் இளவரசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்
தலைமை செயலகத்தில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உடனான முக்கிய ஆலோசனை முடிந்த நிலையில் விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர் முதற்கட்டமாக புதுக்கோட்டையில் இன்று மாலை 4.30 மணிக்குஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர். புதுக்கோட்டையில் அருந்ததியர் காலனி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியப்பட்டி ஆகிய இடங்களில் முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் தஞ்சையில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்புகளை நாளை பார்வையிடவுள்ளது மத்திய ஆய்வு குழு.