கோவையில் பேருந்தில் நகைபறிக்க முயன்று தப்பியோடிய பெண்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. அப்பேருந்தில் கைக்குழந்தையுடன் 4 பெண்கள் ஏறியுள்ளனர். கூட்டமாக இருந்த பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் உடனிருந்த இன்னொரு பெண்ணிற்கும் அமர இடமளித்துள்ளனர். பேருந்து சென்று கொண்டிருக்கும் போது முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த சக பயணிகள் அவர்களை மடக்கி பிடித்தனர். வைசியாள் வீதியில் பேருந்தை நிறுத்தியதும் நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஒடினர். கெம்பட்டி காலணி பகுதிக்குள் ஒடிய பெண்களை, சில பேருந்து பயணிகள் பின்தொடர்ந்து ஒடி பிடிக்க முயன்றனர். திருடர், திருடர் என சத்தமிட்டதால், ஒடிய 4 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து 4 பேரையும் சராமரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடை வீதி காவல் துறையினரிடம் 4 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 4 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்திய விசாரணையில் அவர்கள் இதுபோன்ற தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
முன்னதாக இப்பெண்களை போலீசார் பிடிக்க முயன்றபோது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு ஓட்டம் பிடிப்பதும் தொடர் சம்பவமாக நடந்து வந்த்தாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பிடிப்பட்ட நான்கு பெண்களும் காவலர்களிடமிருந்து தப்பிக்க உடல் உபாதைகளை காவலர்கள் முன்னிலையே கழித்தது காவலரிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பலநாட்களாக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பெண்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.