வேளாண்மைத் துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணுவின் சொந்த ஊர் உள்ளிட்ட அவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றி அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
![DMK shocked the AIADMK minister in local body election](http://image.nakkheeran.in/cdn/farfuture/H2-_qraxWV6N62TrdO5QcnHDphZO5kriMU1y4kO_Ioc/1578320322/sites/default/files/inline-images/1111_20.jpg)
அதிமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்துவருகிறார் அமைச்சர் துரைக்கண்ணு. இவர் பாபநாசம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று அமைச்சரானார்.
அமமுக உறுவாகுவதற்கு முன்புவரை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக தஞ்சாவூர் எம்எல்ஏவாக இருந்த ரெங்கசாமியே இருந்தார். அவர் அமமுகவிற்கு சென்றதும் அந்த பொறுப்பை வேறு யாருக்கும் சென்றுவிடாமல் ஒ.செவாக இருந்த துறைக்கண்ணு தன்வசமாக்கினார். அதோடு ஒன்றிய செயலாளர் பொறுப்பையும் யாரிடமும் கொடுக்காமல் அவரே வைத்திருப்பது அதிமுகவினரை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
இந்தநிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் துரைக்கண்ணுவின் கட்டுப்பாட்டில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு, திருப்பனந்தாள், அம்மாபேட்டை, ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏழு ஒன்றியங்களில் உள்ள 138 வார்டுகளில் திமுக 89 இடங்களையும் அதிமுக வெறும் 35 இடங்களையும் அமமுக 6 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இதேபோல ஏழு ஒன்றியங்களில் உள்ள 14 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் ஒரு இடத்தை தவிர மற்ற அனைத்து இடங்களையும் திமுக வெற்றி பெற்றது அமைச்சருக்கு மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.