இந்தியாவில் நிலத்தடி நீர் குறைந்துள்ள பகுதிகளை கண்டறிந்து மீண்டும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீரமங்கலம், ஆலங்குடி சுற்றியுள்ள வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீரை சேமிக்க அரசுகள் செய்துள்ள பணிகள், தனிநபர்கள் செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வுகள் செய்ய மத்திய உணவு, பொது விநியோகத்துறை பொருளாதார ஆலோசகர் மற்றும் இணைச் செயலாளர் மணிஷா சென்ஷர்மா, மத்திய உணவு பொது விநியோகத்துறை துணைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆலிஸ் ரோஸ்லின் டேடே, மத்திய நதிநீர் வாரிய தொழில்நுட்ப அலுவலர் சந்தியா யாதவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர்.
கீரமங்கலத்தில் உள்ள பிரமாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதை ஆய்வுக்குழுவினர் பார்வையிட்ட பிறகு செரியலூர் ஜெமின், செரியலூர் இனாம் ஊராட்சிகளில் கழிவு நீரை பூமிக்குள் செலுத்தும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து அதே பகுதியில் சொட்நீர் பாசனத்தில் பூ செடிகள் வளர்ப்பதை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அம்புலி ஆற்றை பார்வையிட மத்திய குழுவினர் சென்ற போது பொதுப்பணித்துறை சார்பில் வந்திருந்த பொறியாளர் நிலடித்த நீரை சேமிக்க ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் 6 மாத காலத்திற்குள் தடுப்பணை கட்டப்பட உள்ளதாக மத்திய குழுவினரிடம் விளக்கினார்கள்.
அப்போது அங்கு நின்ற விவசாயிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இதே ஆற்றில் விவசாயிகள் சொந்த செலவில் மண்ணால் அணை அமைத்து அப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறோம். அதனால் விவசாயிகள் கட்டிய அணையை பார்வையிட்டு அந்த இடத்தில் தடுப்பணையை கட்ட வேண்டும் என்றனர். ஆனால் அதிகாரிகள் தாமதமாகிவிட்டதாக கூறி அங்கு செல்லவில்லை. அதனால் கஜா புயலின் போது வந்த மத்திய ஆய்வுக்குழுவையும் இப்படியே சாலை ஓரங்களில் அழைத்துச் சென்றார்கள், அதேபோல நீர்நிலை ஆய்வுக்கு வந்துள்ள குழுவினரையும் சாலை ஓரங்களில் அழைத்துச் சென்றால் எப்படி ஆய்வுகள் செய்ய முடியும் இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்று அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரிடம் அம்புலி ஆறு, வில்லுனி ஆறு போன்ற காட்டாறுகளில் உள்ள முழு ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதுடன் வரத்துவாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மழைத் தண்ணீர் ஆறுகளில் ஓடி குளங்களில் சேமிப்பாகி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், 1980 க்கு முன்பு பலவகை மரங்களுடன் காடுகள் இருந்தது மழையும் பெய்தது. ஆனால் தற்போது அரசாங்கமே மழை பொழிவை தடுக்கும் தைல மரங்களையும், முந்திரி மரங்களையும் காடுகளாக வளர்ப்பதால் மழை பொய்த்து வறட்சி அதிகரித்துள்ளது அதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தைலமரக்காடுகள், முந்திரிக்காடுகளை அழித்துவிட்டு பல்வகை மரங்களை காடுகளாக வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.