வேலூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி. 2011ல் தான் உருவாக்கப்பட்டது. ஆம்பூர் நகரம், மாதனூர் ஒன்றியம், ஆலங்காயம், பேரணாம்பட்டு ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கியது.
தொகுதிக்குள் மாதனூர் ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியம், பேர்ணாம்பட்டு ஒன்றியம், ஆம்பூர் நகரம் என மொத்தம் 242 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 35 பஞ்சாயத்துகள் 94 வாக்குச்சாவடிகளும், பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 பஞ்சாயத்துகளில் 40 வாக்குச்சாவடிகளும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 பஞ்சாயத்துக்களில் 14 வாக்குச்சாவடி மையங்களும் மற்றும் ஆம்பூர் நகர பகுதியில் உள்ள 36 வார்டுகளில் 94 வாக்குச்சாவடி மையங்கள் இந்த தொகுதியில் உள்ளன.
கடந்த ஜனவரி மாத நிலவரப்படி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,08,247, பெண் வாக்காளர்கள் 1,13,047, பிற வாக்காளர்கள் 08 என மொத்தம் 221302 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் தலித் மக்கள், இஸ்லாமிய மக்கள், நாயுடு, வன்னியர், முதலியார் சாதியினர் வாழ்கின்றனர். தொகுதிக்குள் தோல் தொழிற்சாலை நிரம்பியுள்ளது. பெரும்பான்மை மக்கள் அதை நம்பித்தான் உள்ளனர். அதற்கடுத்து விவசாயம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்த தொகுதியில் உள்ள ஆம்பூர் நகராட்சியில் ஒருமுறை இந்து சமுதாயத்தை சேர்ந்தவர் நகர மன்ற தலைவர் பதவியில் அமர்ந்தால் மறுமுறை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் அந்த பதவியில் அமர்வர். இது நூறாண்டாக அப்பகுதி மக்களும், அரசியல்வாதிகளும் கடைப்பிடிக்கும் நடைமுறை. அதுவே தற்போது சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது.
2011ல் மமக வேட்பாளர் அஸ்லம்பாஷா வெற்றி பெற்றார், 2016ல் அதிமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணி வெற்றி பெற்றார். அப்படி வெற்றி பெற்ற பாலசுப்பிரமணி, ஜெ. மறைவுக்கு பின் தினகரன் அணிக்கு சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் வருகிறது.
இந்த தொகுதியில் தற்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தற்போது வேட்பாளராக நிற்கிறார்கள்.
அமமுக சார்பில் பாலசுப்பிரமணி (தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்), திமுக சார்பில் அ.செ வில்வநாதன், அதிமுக சார்பில் ஜோதி ராமலிங்க ராஜா தற்போது களத்தில் உள்ளனர்.