கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் சிலைக்கு அதிமுக., சார்பில் 13.5 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111 வது ஜெயந்தி, 56 வது குருபூஜை அக்.30 இல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு 13.5 கிலோ தங்க கவசம் அதிமுக சார்பில் அணிவிக்கப்படுகிறது. விழா நிறைவடைந்ததும் தங்க கவசம் மதுரை அண்ணா நகர் கிளை பேங்க் ஆப் இந்தியா லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
குரு பூஜையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்.24ல் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்படுகிறது. இந்தாண்டு குருபூஜையையொட்டி நேற்று காலை 10:15 மணியளவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டனர்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடன் சென்றனர். மதுரையில் இருந்து தங்க கவசம் போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு வரப்பட்டது. மதியம் 1:30 மணியளவில் தேவர் சிலைக்கு நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் முன்னிலையில் தங்க கவசம் அணிவிக்கபட்டது. ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, பழனி, எஸ்.தங்கவேல், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.