ரயில் பயணம் என்பது பாதுகாப்பானது. அது போலவே கட்டணமும் ஓரளவு நியாயமாக இருக்கிறது என்பது பயணிகளின் நம்பிக்கை. இதை மட்டும் சும்மா விட்டு வைக்குமா மத்திய பா.ஜ.க.மோடி அரசு. ஆம். திட்டமிட்டு விட்டது என்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள்.
ஈரோட்டில் ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கமான எஸ்.ஆர் .எம் .யு பொதுச்செயலாளர் கண்ணையா வந்திருந்தார். அதற்கு பிறகு கண்ணையா நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசும் போது, ‘’மத்திய பா.ஜ.க. அரசு நமது தென்னக ரெயில்வேயில் லாபகரமாக இயங்குகின்ற சென்னை பெரம்பூர் ஐ.பி.எப். மற்றும் உத்தரபிரதேசம் ரேபரேலியில் மாடர்ன் கோச் தொழிற்சாலை ஆகிய இரண்டையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்க மத்திய அரசு கொள்கை முடிவு செய்துள்ளது.
இப்போது மார்டன் கோச் தொழிற்சாலையில் ஒரு ரெயில் பெட்டி தயாரிக்க ரூ 2 கோடி செலவாகிறது. இது தனியாருக்கு சென்றால் ரூ. 3 கோடியே 45 லட்சம் கொடுத்து அதனை மத்திய அரசு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் நூறு டிக்கெட்டுக்கு ரூ.47 மட்டுமே ரயில்வே துறை வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியாருக்கு விற்பனை செய்யும் பட்சத்தில் ரூ .850 டிக்கெட்டுக்கு ரூ.2000 வசூலிக்கப்படும். ரூ .350 டிக்கெட் பதில் ரூ. ஆயிரம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதே போல் ரெயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறி ஆகிவிடும் . கட்டண உயர்வு என்பது ரெயிலில் செல்வது விமானத்தில் செல்வது போன்று பணம் செலுத்தும் நிலைமை உருவாகிவிடும். அந்த அளவிற்கு கட்டண உயர்வு அதிகரித்துவிடும்." என்றார்.