சேலம் மத்தியச் சிறையில் கைதியிடம் இருந்து அலைப்பேசி, சிம் கார்டு ஆகியவற்றைச் சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த தீபன் (25) என்பவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைக்குள் ரகசியமாக அலைப்பேசி பயன்படுத்தி வருவதாகச் சிறை நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறைக் காவலர்கள், தீபனிடமும் அவருடைய அறையிலும் சோதனை நடத்தினர். தரையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்களைப் பெயர்த்து எடுத்து அதன் அடியில் அலைப்பேசி, சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிறை நிர்வாகம், சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் தீபன் மீது புகாரளித்தது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீபனிடம் அலைப்பேசி கொடுத்தது யார்? அவரைப் பார்க்க வந்த உறவினர்கள் மூலம் அலைப்பேசி கைமாறியதா? யார் யாரிடம் பேசினார்? சிறைக்காவலர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்தியச் சிறையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 8 அலைப்பேசிகள், கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் கைதியிடம் அலைப்பேசி பிடிபட்டிருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.