கடந்த ஏழாம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண் குமார் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்ற அன்று பத்திரிகையாளர்களிடம், பொதுமக்கள் புகார் அளிக்க 9489919722 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணை கொடுத்து அதை பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்த செல்போன் எண் அறிமுகபடுத்தப்பட்ட நாளிலிருந்து நேற்று வரை 64 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், கடந்த ஒன்பதாம் தேதி அன்று சாயல்குடி பகுதியில் இளைஞர்கள் சிலர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக புகார் வந்தது. தகவலின் பேரில் அந்தப் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 முதல் 25 வயது வரை உள்ள ஏழு கல்லூரி மாணவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மேலும், பரமக்குடி நகரின் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமியை 17 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். மேற்படி உள்ள பிரயேக தொலைபேசி எண்ணிற்கு வந்த தகவலையெடுத்து நயினார் கோவில் அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து பாளையங்கோட்டை இளஞ்சிறார் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சட்ட விரோதமாக கலப்படம் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்வதாக தொலைபேசி எண்ணிற்கு தகவல் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி, ஆர் எஸ் மங்கலம், ராமேஸ்வரம் கோவில், பரமக்குடி என அவரவர் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு கலப்படமான 216 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சம்மந்தபட்டவர்களை கைது செய்தனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக புகார் வந்தது, அதன் அடிப்படையில் நான்கு போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில் போக்குவரத்தை சீர் செய்கின்றனர்.
மேலும், இது போன்ற வரும் புகார்களை துரித முறையில் செயல்பட்டு மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதால் அந்த எண்ணிற்கு பல புகார்கள் வர தொடங்கியுள்ளன. இந்த பிரத்யேக எண்ணிற்கு வந்த புகார்களுக்கு தீர்வு கிடைப்பதால் பொது மக்கள் மகிழிச்சி அடைந்துள்ளனர்.