போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காவல் நிலைய மரணங்கள் மட்டுமல்லாது மனித உரிமை மீறல்கள் ஆகியவை காவல் நிலையத்தில் நடைபெறாமல் தடுப்பதற்குக் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 1,578 காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு 38.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு காவல்துறை சில பதில்களைக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், அந்த கேமராக்களின் பதிவுகள் 18 மாதங்கள் வரை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது தமிழக காவல்துறை.