நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.