கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், ‘போலியான ஆவணங்களைக் கொண்டு தன்னை மிரட்டி நிலத்தைப் பதிவு செய்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.அதனைத் தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இத்தகைய சூழலில் தான் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜ் என இருவரை சிபிசிஐடி போலீசார் கரூரில் கடந்த 2ஆம் தேதி (02.09.2024) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் கைது செய்யப்பட்ட இருவரையும் செப்டம்பர் 12 தேதி வரை என 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கரூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். மகேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சேகரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அவருக்கு 5 நாட்கள் சிபிசிஐடி காவல் கோரி இன்று (05.09.2024) மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து சேகருக்கு 2 நாள் சிபிஐடி காவல் வழங்கி நீதிபதி பரத் உத்தரவிட்டுள்ளார்.