அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ''2016-ல் 570 கோடி ரூபாய் நடு ரோட்டில் கண்டெய்னர் லாரியில் பணத்தை பிடித்து இதுவரையில் ஏறத்தாழ 8 வருடம் ஆகிறது. இதனை சிபிஐ தான் விசாரிக்கிறது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பொழுது சிபிஐ இன்வெஸ்டிகேஷன் கேட்கவில்லை. நீதிமன்றமே சிபிஐ விசாரணை கொடுத்தது.
டெல்லியில் நேரடியாக போய் சிபிஐ இடத்தில் கேட்டேன் ஆனால் எட்டு வருடம் ஆகிறது 570 கோடி ரூபாய் யாருடைய பணம் என்பதை இதுவரையில் சொல்லவும் இல்லை, அதற்கான எஃப்.ஐ.ஆரையும் சிபிஐ போடவில்லை. இப்படி பல வழக்குகள் தமிழ்நாட்டில் சிபிஐயில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே சிபிசிஐடி விசாரணை என்றால் துரிதமாக முடிக்க முடியும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் முதல்வர் கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை விசாரிப்பதற்காக சிபிசிஐடி விசாரணை மட்டுமல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியையும் அமைத்துள்ளார்.
ஆனால் எடப்பாடி 'சிபிஐ... சிபிஐ..'. என்று திருப்பி திருப்பி கேட்கிறார். கேட்டால் சிபிசிஐடி காவல் துறை மீது நம்பிக்கையே இல்லை என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. நாங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி ஸ்டே வாங்கி விட்டார். பிறகு 2022-ல் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏற்கனவே விசாரித்தது சரியில்லை என்பதற்காக ஸ்டேட் போலீஸ் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரித்தார்கள்.
காவல்துறையின் சார்பாக விசாரித்து வந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. நான் தனிப்பட்ட முறையில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அதனுடைய அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்றது. காவல்துறையும் அதனை விசாரிக்கும் காரணத்தினால் ஒரே வழக்கிற்கு இரண்டு பேர் தேவையில்லை என்று நான் அந்த மனுவை திரும்ப பெறுகிறேன் என்று சொன்னேன். இது ஒன்றும் புதிதாக நடைபெறவில்லை. 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது டான்சி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தான் திமுக சார்பில் தொடர்ந்தேன். அதனுடைய வரலாறு உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்கை போட்டார் என்பதற்காக சண்முகசுந்தரம் 32 இடங்களில் வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு அரசு ஊழியர் செய்ய முடியாத செயலை செய்தால் 169 சட்டப்பிரிவின்படி தண்டிக்கலாம். அந்த வழக்கை நாங்கள் தான் முதல்முறை சைதாப்பேட்டை கோர்ட்டில் போட்டபோது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜெயலலிதாவிற்கு சம்மன் அனுப்பினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் போய் அதற்கு ஸ்டே கேட்டார். நீதிபதி ஸ்டே கொடுக்க மறுத்துவிட்டார். நீங்கள் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டும் ஸ்டே கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்தார். அதனால் என்னென்ன கஷ்டங்களை நீதிபதி அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் நாட்டிற்கும் தெரியும்'' என்றார்.