காவிரி ஆறு எப்போதும் தண்ணீர் இல்லாம் வறண்டு போய் இருக்கும் ஆனால் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடந்த 25 நாட்களுக்கு மேலாக காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் காவிரி ஆற்றை நம்பி இருக்கும் கடைமடை கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடாமல் கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து விட்டு யாருக்கும் பயன் இல்லாமல் கடலில் கலக்க வைக்கிறார்கள். இந்நிலையில் ஆற்றில் மணல் கொள்ளையும், தூர்வாருவதிலும் ஊழல் நடக்கிறது என்பதை கண்டித்து இன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மண்டலம் பொது பணித்துறை நீர்வள ஆதாரத் துறையில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் பேனர் பிடித்து ஊர்வலமாக முழக்கமிட்டு வந்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் . வெண்ணாற்றை சீரமைக்க 800 கோடி என்னாச்சு? கல்லணை கால்வாய் சீரமைக்க 2000 கோடி என்னாச்சு? என சரமாரி கேள்விகளை எழுப்பி அந்த அலுவலகத்தையே அதிர வைத்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருச்சி நகர தலைவர் தோழர் வின்சென்ட் மற்றும் தோழர்கள், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை மற்றும் அரியூர் பகுதி விவசாயிகள் திருநாவுக்கரசு மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். சுமார் அரை மணி நேரமாக ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடைமடைக்கு தண்ணீர் செல்லாத வாய்க்கால், ஏரிகள், குளங்கள் விவசாயிகளை திரட்டி நடவடிக்கை எடுப்போம் என கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். அப்போது அவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.