தமிழகம் முழுவதும் ஐந்து மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 300- க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் உள்ளனர். இவர்களது ஓய்வு பெறும் வயது 58 எனும் நிலையில், சிறப்பாகப் பணியாற்றும் இந்த நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும். அதனால், மாவட்ட நீதிபதிகள் 60 வயது வரை பணியாற்றி ஓய்வு பெறுவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பணி நீட்டிப்பு பெறும் நீதிபதிகள் குறித்து நிர்வாகக் குழு விசாரித்து, அதன் பின்னரே பணி நீட்டிப்பு வழங்கி வருகிறது.
இந்நிலையில், 58 வயதை எட்டியுள்ள மாவட்ட நீதிபதிகள் பலருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. மாவட்ட நீதிபதி தேவநாதன் என்பவருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு உத்தரவிட்டது.
இதன்பின்னர், மேலும் சில மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான அனைத்து நீதிபதிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில், கன்னியாகுமரியில் குடும்பநல நீதிமன்ற மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் கோமதிநாயகம், பிற ஊர்களில் பணியாற்றும் மாவட்ட நீதிபதிகள் தானேந்திரன், கணேசன், மீனாசதீஷ் ஆகியோருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது தொடர்பான உத்தரவுகளை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.