''பிச்சை புகினும் கற்கை நன்றே'' என எப்படிபட்ட வறுமை நிலையிலும் கல்வியைக் கற்றுக்கொள் என்பது ஆன்றோர் சொல். ஆனால் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அந்த மாணவ, மாணவியர்களுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் அவர்களுக்கான கல்வி மறுக்கப்படும் கொடுமையும் அரங்கேறி உள்ளதுஅந்த கிராமத்தில்.
நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதியில் மூன்று தலைமுறையாக சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்து காட்டு நாயக்கர் சமூகமக்கள் அடிப்படையில் கூலி, மற்றும் கொத்தடிமை வேலையிலிருப்பவர்கள். இந்த சமூக மக்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் திருத்தப்பட்ட 1975ன் வரிசை எண் 9ன் உத்தரவுப்படி இவர்கள் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள். இவர்களின் 20க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அங்குள்ள, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களுக்கான முறையான சாதிச் சான்றிதழ்கள் அரசுத்தரப்பில் வழங்கப்படாததால் இந்த மாணவர்கள் கல்விக்கான அரசு உபகாரத் தொகையைக் கூடப் பெறமுடியாமல் தவிக்கும் நிலையில், மேற்படி பள்ளிகள் சாதிச்சான்று அவசியம் என்று இவர்களிடம் கெடுபிடிகள் காட்டுகிறதாம்.
குறிப்பாக சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால், தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த முத்தார், ராஜேஸ்வரி இரண்டு மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டுள்ளனர். தங்களுக்கும் இந்த நிலை வருமோ என்கிற அச்சத்திலிருக்கிறார்கள் மற்ற மாணவிகள்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிறபகுதியில் வசிக்கிற இச்சமூக மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் கொடுத்திருக்கிறது நெல்லை மாவட்ட நிர்வாகம். ஆனால் அதன் அதிகாரத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சப்கலெக்டரிடம் பலமுறை நாங்கள் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை கொடுத்த அரசு நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பிற்குத் தேவையான சாதி சான்றிதழ்களைத் தரவில்லை. இதனால் படித்த மாணவர்கள் வேலைக்குக் கூடப் போக முடியாமல் கிடைத்த வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
வாக்களிக்கும் உரிமை பெற்ற நாங்கள் சாதிச்சான்று இல்லாத காரணத்தால் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்க முடியாது. சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் எங்களின் ஆதார், ரேசன், ஓட்டர் ஐ.டி. கார்டுகள் ஆகியவைகளை திரும்ப ஒப்படைக்கும் அடுத்தகட்ட நிகழ்வுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார் அந்தப் பகுதியின் சமூக நல ஆர்வலரான டேனியல்.
உயர் கல்வி கற்றாலும் சாதி அத்தாட்சி தான், மாணவர்களின் வாழ்க்கையையும், தலைவிதியையும் தீர்மானிக்கிறது.