தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருநாள் முன்னதாக, தேர்தல் செலவு கணக்குகளைப் பராமரிப்பதற்காக வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவருடைய முதன்மை முகவர் ஆகிய இருவர் பெயரில் கூட்டாகவோ, வங்கியில் பிரத்யேக கணக்கு தொடங்கி, அதன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்பவர் மற்றும் அவருடன் 2 நபர்கள் என அதிகபட்சம் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதற்கு 10 நபர்கள் உடன் வந்தாலும், மனுத்தாக்கலின்போது அவருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்புமனுவை, வேட்பாளரோ அல்லது முன்மொழிபவரோ தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் நபர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.