Skip to main content

‘விநாயகர் சதுர்த்தி’ அனுமதி கோரி வழக்கு; முடித்து வைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Case seeking permission of Ganesha Chaturthi; High Court concludes ..!

 

விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, கடந்த ஆண்டைப் போலவே கோவில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

 

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்குத் தமிழக அரசு தடை விதித்து இருந்தது. வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

 

இந்தநிலையில், இந்து முன்னேற்றக் கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, கரோனா பரவல் காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போலவே வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளைச் சிறிய கோவில்களின் முன்பு  வைக்கவும், அந்த சிலைகளை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர்நிலைகளில் கரைப்படும் என்று தெரிவித்தார்.

 

அரசின் இந்த பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்