உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாகப் பக்தர்கள் இன்றி நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4 ஆம் தேதி (இன்று முதல்) அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்று (04/05/2020) நடைபெறும் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை இணையத்தளத்தில் பார்க்கக் கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி, https://tnhrce.gov.in//hrcehome/index.php, www.maduraimeenakshi.org/live webcast மற்றும் பேஸ்புக், யூ ட்யூபில் பார்க்கலாம். இன்று (04/05/2020) காலை 09.00 மணி முதல் சேத்தி மண்டபத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரலையில் காணலாம். பக்தர்களின்றி சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்துகின்றனர்.