ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகையில், தங்களது பாக்கியை வழங்கக் கோரி, வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவுக்கு, நவம்பர் 5 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தீபா, தீபக் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தனி அதிகாரிக்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள 'வேதா நிலையம் இல்லம்' நினைவு இல்லமாக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
வேதாநிலையம் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
வேதா நிலையம் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட தென் சென்னை வருவாய்க் கோட்டாட்சியர் லஷ்மி, நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி என்ற முறையில் 24 ஆயிரத்து 322 பரப்பு கொண்ட வேதா நிலையம் இல்லத்துக்கு, 68 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து உத்தரவிட்டார்.
அதன்படி, இந்தத் தொகை, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல் அதிகாரியின் இழப்பீட்டு உத்தரவை மனுவாக, செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிட்டி சிவில் நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது குறித்து, செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க, தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36 கோடியே 87 லட்சம் ரூபாயை வழங்கும்படி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனுத் தாக்கல் (மெமோ) செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை மனு குறித்து தீபா, தீபக் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி ஆகியோர், நவம்பர் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்க, சென்னை ஆறாவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.