இன்ஸ்டாகிராமில் விடுத்த 10 ரூபாய் போட்டியை ஏற்று மொபட்டில் சென்று நடு ரோட்டில் குளித்த வாலிபர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூ.3,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் ஒன்றாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளது. இங்கு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, திருவேங்கட வீதி சாலை ஆகிய 5 சாலைகள் இணைகிறது. இதில், மாவட்ட எஸ்.பி. அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஜவுளிச் சந்தை, வணிக வளாகங்கள் இயங்கி வருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், சிக்னலில் வந்து நின்றார். பின்னர், மொபட்டில் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில்... மக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் குளிக்கத் தொடங்கினார். இதனை அவரைப் பின்தொடர்ந்து வந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிக்னல் விழுந்தும் செல்லாமல் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அவர் உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாகக் குளித்துக் கொண்டிருந்தார். பின்னர், அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் எச்சரிக்க அவர் அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, நடு ரோட்டில் குளித்த வாலிபர், வெள்ளோட்டினைச் சேர்ந்த பார்த்திபன்(26). இவர், இன்ஸ்டாகிரம் மூலம் அவரது ஃபலோவர்கள் அளிக்கும் சவால்களை ஏற்பார். அதன்படி, ஒருவர் 10 ரூபாய் தருகிறேன். நடு ரோட்டில் குளிக்கும் படி சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்று, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடு ரோட்டில் குளித்து, சவாலுக்கான ரூ.10-ஐயும் பெற்றார். பார்த்திபன் ஏற்கனவே இரவு நேரத்தில் நடு ரோட்டில் தூங்குவது, பச்சை மீன்கள் சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை செய்துள்ளார். பார்த்திபன் குளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பார்த்திபன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று, பார்த்திபனை ஈரோடு டவுன் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். இதனை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஹெல்மெட் அணியாமல் வருதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது என 3 பிரிவின் கீழ் போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனுக்கு ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது. இவரைப் போன்று இளைஞர்கள் யாரும் இந்த விபரீத செயலில் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.