Skip to main content

சாலை அமைப்பதற்கு எதிரான வழக்கு! -தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

Case against road construction on canal! - High Court imposes Rs 2,000 fine on Tamil Nadu government!

 

 

விவசாயத்திற்காக நீர் கொண்டு செல்லும் கால்வாய்  மீது சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  பதிலளிக்காமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்கப்பட்டதால்,  அரசுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கோவை பேரூர் பகுதியில் விவசாயத்திற்கு நொய்யல் ஆறு மிக முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.  இந்த பாசனத்தினைப் பயன்படுத்தி, பேரூர் கீழேரி பட்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து, அப்பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.

 

இந்த கோவில் நிலங்களின் ஒரு பகுதி விவசாய நிலமாகவும், மற்றொரு பகுதி நீர் வரும் கால்வாயாகவும்,  நடுவில் மண்ணால் போடப்பட்ட சாலையாகவும் இருந்து வருகிறது. கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதும், ஆக்கிரமிக்கப்படுவதும்,  சமீப காலமாக  அதிகரித்து வந்தது.

 

இந்நிலையில்,  கால்வாய் மீது புதிய சாலை அமைப்பதற்கு,  கோவை மாவட்ட ஆட்சியர்  அனுமதி வழங்கியிருந்தார்.   இந்த அனுமதி குறித்து, அப்பகுதி கிராம மக்களிடம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, கால்வாய் மீது சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி,  பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் குத்தகை விவசாயிகள் சங்கம் மற்றும் பேரூர் கீழேரி நீர்ப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

 

இதை பதிவு செய்த நீதிபதி அனிதா சுமந்த், தொடர்ந்து கால அவகாசம் கேட்பதால், தமிழக அரசின் வருவாய்த் துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூர் பஞ்சாயத்தின் செயல் அதிகாரி ஆகியோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அந்த தொகையை,  அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, வரும் அக்டோபர் 9-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்