சென்னை அருகே அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் இம்தியாஸ். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று, இம்தியாஸ் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாகச் சென்ற கார் சாலையில் படுத்திருந்த நாய் மீது ஏறி இறங்கியுள்ளது. இதன் காரணமாக நாய்க்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இம்தியாஸ், கார் ஓட்டுநரை பார்த்து கவனமாகக் காரை ஓட்டி செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் கோவப்பட்ட காரின் ஓட்டுநர் இறங்கி வந்து இம்தியாஸிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் இம்தியாஸை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார், இம்தியாஸை தாக்கிய கார் ஓட்டுநர் காட்டாங்கொளத்தூர் ஆலயம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.