இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குச் (இஸ்ரோ) சொந்தமான ராக்கெட் ஏவுதளம் நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ளது. இந்த ஏவுதளத்தில் ராக்கெட்டிற்கு நிரப்பக்கூடிய திரவ நிலை ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு புதுச்சேரியிலிருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கடலூர் மாவட்டம் மேலப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வகணபதி (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் புறக்காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை லாரி வந்தபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் செல்வகணபதி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கவிழ்ந்த லாரியிலிருந்து, ஒரு திரவ நிலை ஆக்சிஜன் சாலையில் பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பஞ்சப்பூர் புறக்காவல் நிலைய போலீசார், திருச்சி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், டேங்கர் லாரி தீ பிடிக்காமல் தடுக்க, தீ பரவாமல் தடுக்கும் ரசாயன கலவையைத் தெளித்தனர். மேலும் மாற்று டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்த திரவ நிலை ஆக்ஸிஜன் அதில் மாற்றப்பட்டு, மகேந்திரகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.