திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பயிற்சி முகாமிற்கு வரும் அதிகாரிகள் ஒன்றிய பெருந்தலைவர்களையோ, ஒன்றிய குழு உறுப்பினர்களையோ அழைக்காமல் சுய உதவிக்குழு கூட்டமைப்பை சேர்ந்த பெண்களை வைத்துக் கொண்டு பயிற்சி முகாம் நடத்துவதால் இந்த திட்டம் மூலம் (கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்) முறையான பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்காமல் போய் விடுகிறது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக பயிற்சி முகாம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அறையில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா (எ) சீனிவாசன், அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி, “பயனாளிகளை தேர்வு செய்யும் போது குடும்ப உறுப்பினர்களுக்கான ஆதாரங்களை பதிவு செய்ய வேண்டும். புதிய குடிசை வீடுகள் மட்டுமே கணக்கெடுக்க வேண்டும். இதில் பயனாளிக்கு ஒரு இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்ட வீடும், குடிசை வீடும் இருந்தால் அந்த இரண்டு வீடுகளுக்கும் ஊராட்சியில் வரி வசூல் செய்திருந்தால் பயனாளிகள் தேர்வு பட்டியலிலிருந்து அவரை நீக்க வேண்டும்” என கூறினார்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசுப்பி ரமணியன் (சத்துணவு), அனிதாரூபி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏஞ்சலின் மார்த்தா, சுமதி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடைபெறும் அறைக்கும், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி அறைக்கும் 50அடி தூரம் தான் வித்தியாசம். 24 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒன்றிய பெருந்தலைவருக்கோ, ஊராட்சி மன்ற தலைவருக்கோ, ஒன்றிய குழு உறுப்பினருக்கோ அழைப்பு இல்லாமல்; கூட்டம் நடத்தப்படுவதால் இங்கு பேசப்படும் விஷயங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்றிய பெருந்தலைவரும், உறுப்பினர்களும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் முறையிட இருக்கிறார்கள். இதுபோல் பல இடங்களில் ஊராட்சி மன்றத்தலைவரோ, துணைத்தலைவரோ, ஒன்றிய குழு உறுப்பினரோ சிபாரிசு செய்யும் பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்காமல் போய்விடவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், ‘எனது வார்டுக்கு உட்பட்ட பயனாளி ஒருவருக்கு நான் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் வழங்க சிபாரிசு செய்தால் தகுதி இல்லை என்ற ஒரு வார்த்தையை சொல்லி நீக்கி விடுகின்றனர். நாங்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டால் எங்களுக்கு எப்படி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது என்பது தெரிந்துவிடும். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டால் இது அரசு மீட்டிங், அஃபிசியல் மீட்டிங் என கூறிவிடுகின்றனர். சுயஉதவிக்குழு கூட்டமைப்பினர் எப்போது அரசு பணியாளர்களாக மாறினார்கள். அவர்களுக்கெல்லாம் அழைப்பு இருக்கும்போது எங்களை ஏன் அழைக்க கூடாது என கேள்வி எழுப்பினர். அதோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடு வழங்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வீடு வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி, வேறு அரசு நலத்திட்டமாக இருந்தாலும் சரி அதற்கான பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி, ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினரை அழைக்க வேண்டும். இது சம்பந்தமாக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் முறையிட இருக்கிறோம்’ என்று கூறினார்கள்.