ஆன்மீக நகரமாக கருதப்படும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி விழா நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல அதிகமாக சாமியார்கள் எனக் கூறிக்கொண்டு பல்வேறு நபர்கள் விதவிதமாக திருவண்ணாமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை தேரடி வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கார் அனைவருக்கும் அச்சத்தை கொடுத்தது. காரணம் அந்தக் காரின் முன் பக்கத்தில் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இது குறித்து போலீஸாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் அந்தக் கார் யாருடையது என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அந்தக் காரின் முன் பக்கத்தில் உள்ள டேஷ்போர்டில் நான்கிற்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் அடுக்கபட்டிருந்தது. காரின் முன்பக்கம் வாகன பதிவு எண் இல்லாமல் 'அகோரி, நாகா சாது' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. காரின் பல இடங்களில் டேஞ்சர் டேஞ்சர் எனவும் மண்டை ஓடு புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தது. உள்ளே ஒருவர் உடல் முழுவதும் சாம்பல் மற்றும் உத்திராட்ச மாலைகள் அணிந்தபடி அமர்ந்திருந்தார். அந்த நபரிடம் விசாரித்த போது ரிஷிகேஷில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தெரிவித்துள்ளார். பார்க்கிங்கில் நிறுத்துவதற்கு இடம் கிடைக்காததால் சாலையிலேயே காரை நிறுத்தி விட்டு சென்றதாக அந்த நபர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக காரை நிறுத்திய அந்த நபருக்கு போலீசார் மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற வினோத கார் வந்தது தி.மலை பகுதி மக்களுக்கு சிறிது அச்சத்தையும் கொடுத்தது.