“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
மோடியால் உண்டான “கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு தமிழகத்தை சாய்க்குமுன் வெட்டி எறிய வேண்டும் என தமிழக வாழ்வுரமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் மாறாக, அவர்கள் நிராகரித்த மோடியின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஏற்பவே நடக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.
உணவு, கல்வி, விவசாயம். மின்சாரம் என அடிப்படை வாழ்வியல் நல உரிமைகள் அனைத்தையும் நடுவண் பாஜக மோடி அரசுக்குப் பலியிட்டிருக்கிறார்.
அந்த வகையில் இப்போது தமிழகத்தின் உயிர்-நீர் ஆதாரமான காவிரிக்கும் முடிவுரை எழுதுகிறார்.
தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் தொடர்பான பிரச்சனையில் எடப்பாடி அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே தமிழகத்துக்கு எதிரான, விரோதமான, துரோகமான வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கிரார்.
காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பான நான்கு மாநிலங்களின் மேல் முறையீட்டு விசாரணை கடந்த 17ந் தேதியன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வின் முன் நடைபெற்றது.
அப்போது “தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைத் தேக்கி வைக்கவே மேகதாதுவில் புதிய அணை” என வஞ்சதந்திரத்துடன் வாதிட்டது கர்நாடகம்.
கர்நாடகத்தின் இந்த வாதத்தை தமிழகம் ஏற்கலாம்தானே என்று நீதிபதிகள் சொல்ல; அதை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டார் தமிழக அரசின் வழக்குரைஞர்.
“தமிழகத்துக்கு தண்ணீர் தர தடையில்லையென்றால் மேகதாதுவில் புதிய அணை கட்டவும் தமிழகம் எதிர்க்காது” என்றார் தமிழக வழக்குரைஞர்.
அதோடு “புதிய அணையைக் கண்காணிக்க சிறப்பு ஆணையம் ஒன்றையும் அமைக்க வேண்டும்” என்றார்.
தமிழக அரசு வழக்குரைஞர் சேகர் நாப்தேவின் இந்தக் கருத்துக்கள் தமிழகத்திற்கு எதிரானவை; காவிரி பிரச்சனை வழக்கில் தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கும் எதிரானவை.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்ப் பகிர்வு ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளையும் சட்டப்படி நடுவண் அரசு அமைத்தாக வேண்டும் என்பதுதான் இறுதியும் அறுதியும் உறுதியுமான நிலை.
இந்த நிலையை சீர்குலைத்து காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக் குழு, ஏன், நடுவர் மன்றத்தையேகூட ஒழித்துக்கட்ட முனைகிறது மோடி அரசு.
மோடி அரசின் இந்த வஞ்சகத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.
மேகதாதுவில் அணை கட்டுவது, மாநிலங்களுக்கிடையிலான தேசிய நதிநீர்த் தாவா சட்டப்படி மாத்திரமல்ல; நாடு விட்டு நாடு பாயும் நதிகள் குறித்த பன்னாட்டளவிலான சட்டப்படியும் கூடாது என்பது சட்டம் படித்த தமிழக வழக்குரைஞருக்குத் தெரியாதா என்ன?
இப்படி அவர் வாதிட்டிருப்பது தான்தோன்றித்தனமாகவா அல்லது பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் சொல்லித்தானா என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
எப்படி இருந்தாலும் தமிழக அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்றத்தில் பதிவாகிவிட்டிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் முழு பொறுப்பு.
இதற்கு முன்னர் தமிழகத்தின் நல-உரிமை தொடர்பான விடயங்களில் மோடியின் உணர்வுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப நடந்துகொண்டபடியே காவிரி பிரச்சனையிலும் முடிவுரை எழுதியிருக்கிறார் எடப்பாடி என குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
நோய் வந்தால் உடல்நலம் கெடும்; செயல்பாடு முடங்கும். தமிழகத்திற்கு வந்திருப்பதோ புற்றுநோய்; உயிர் குடிக்கும் நோய்; மோடியால் உண்டான “கேன்சர் கட்டி”; எடப்பாடி அரசு எனும் கேன்சர் கட்டி!
இந்த கேன்சர் கட்டி தமிழகத்தின் உயிரைக் குடிக்குமுன் அதனை வெட்டி எறிந்தாக வேண்டும்.
அதற்காக தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.