தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை உள்ளடக்கிய மேல்நிலைக் கல்வியில் இரு வகையான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. பொதுப் பாடப்பிரிவு, தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆகியவை தான் அந்த இரு பாடத்திட்டங்கள் ஆகும். பொதுப்பாடப்பிரிவில் கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, கணினி அறிவியல் பிரிவு, கணக்குப் பதிவியல் பிரிவு, வரலாறு பிரிவு உள்ளிட்டவை உள்ளன. தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொறியியல், வேளாண்மை, கணக்குப் பதிவியல், செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. பொதுப் பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதே நேரத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் அனைத்தும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படித்தவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சியின் காரணமாக எளிதில் வேலைக்கு செல்ல முடியும். அதனால், இந்த பாடங்களுக்கு வரவேற்பு அதிகம்.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நேற்று இதுதொடர்பாக பாமக நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். இந்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.