அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நாளுக்கு நாள் முடங்கி வருகிறது. இந்நிலையில் இருந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் மீண்டும் அழைத்துச் செல்வதற்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் ஒரே தீர்வாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக முதலமைச்சர்களாக முதலில் ஓ. பன்னீர்செல்வமும், அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்பேற்று ஆட்சி செய்து வரும் காலத்தில் பல முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்காத காரணத்தால் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு பக்கத்தில் குதிரை பேரமும், மறுபக்கத்தில் மத்திய அரசோடு சமரசமும் செய்வதற்குத் தான் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் தமிழக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பல்வேறு போராட்டங்கள் நாள்தோறும் வெடித்து வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக் களமாக மாறி வருகிறது. இத்தகைய காரணங்களால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் அறிக்கையின்படி கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகளை விட 2017 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சி தருகிற செய்தியாகும். அந்த அறிக்கையின்படி 2016 இல் மொத்த முதலீடு ரூபாய் 4793 கோடியாக இருந்தது, 2017 இல் ரூபாய் 1574 கோடியாக வீழ்ச்சியடைந்ததையே அந்த அறிக்கை சுட்;டிக்காட்டியிருக்கிறது. பொதுவாக தமிழக அரசால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட பிறகு பல நிறுவனங்கள் முதலீடு செய்யாமல் பின்வாங்குகிற நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆனால் அதேநேரத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முதலீடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. முதலீடு செய்வதற்குரிய சூழல் அந்த மாநிலத்தில் இருப்பதால் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எந்தவொரு தொழிலதிபராவது முதலீடு செய்ய முன்வருவாரேயானால் அவரை முன்கூட்டியே நேரில் அணுகி அவர் விரும்புகிற வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இத்தகை மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்;டு, முயற்சிகளில் மற்ற மாநிலங்கள் வெற்றியடைந்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் துறைமுக வசதி, விமான வசதி, ரயில் போக்குவரத்து, நெடுஞ்சாலை வசதி, மின்சார வசதி ஆகிய அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகள் குறைவது ஏன் ? இதற்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் அணுகுமுறை தான் காரணமாகும்.
குறிப்பாக தெற்கு கொரியா நாட்டிலிருந்து கார் உற்பத்தி செய்யும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் நிலம் வழங்குவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்ட பிறகும், அந்த நிறுவனம் இங்கே தொழில் தொடங்காமல் ஆந்திர மாநிலத்திற்கு சென்றது ஏன் ? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ரூபாய் 100 கோடி செலவில் நடத்தி, 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தம்பட்டம் அடித்து, விளம்பரப்படுத்திக் கொண்ட தமிழகத்தில் முதலீடு செய்யாமல் வேறு மாநிலத்திற்கு செல்வது ஏன் ? இதற்கு தமிழகத்தை ஆட்சி செய்யும் அ.இ.அ.தி.மு.க.வின் பலகீனமான தலைமை தான் காரணமா ? அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நீண்டநாளைக்கு நீடிக்காது என்கிற அரசியல் நிச்சயமற்ற தன்மைதான் காரணமா ? தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களை தவிர்க்கிற வகையில் ஆட்சி செய்ய கையாலாகாத நிலை தான் காரணமா ?
தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் காத்து கிடக்கின்றனர். தற்போது தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் வெடித்து வருகின்றன. குறிப்பாக காவேரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் அரசியல் லாப நோக்கத்தின் காரணமாக காலம் தாழ்த்தி வருகிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புணர்ச்சி தமிழக மக்களிடையே மேலோங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில் இதை எதிர்கொள்கிற வகையில் செயல்பட முடியாத வகையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நாளுக்கு நாள் முடங்கி வருகிறது. இந்நிலையில் இருந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் மீண்டும் அழைத்துச் செல்வதற்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் ஒரே தீர்வாகும். இவ்வாறு கூறியுள்ளார்.