திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் அகில இந்தியா மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி சார்பில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி ஈத்கா மைதானம் அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் டி.எஸ்.வக்கீல் அஹமத் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி அப்துல் ரஹமான், சட்ட கல்லூரி மாணவன் வலி ரஹமானி, மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, ஜாமிய மில்லியா பல்கலைகழக மாணவி ஆயிஷா ரென்னா, அலிகர் பல்கலை கழக மாணவி வர்தா பேக் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி பேசும்போது, "பாகிஸ்தானை பிரிவினை படுத்தியவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. இந்துத்துவ வாதிகள் தான். இங்கு யாரும் இந்து அல்ல, வேதத்தை ஏற்றுக்கொண்டவன் மட்டுமே இந்து. குடியுரிமை தான் இந்த நாட்டை யார் ஆள, ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். அதனால் அதில் கை வைக்கிறார்கள். குடியுரிமை இல்லாதவனுக்கு கல்வி, வேலை, மருத்துவம், கூலி கிடைக்காது இது குடியுரிமையின் சூழ்ச்சமம். இந்த குடியுரிமை பிரச்சனையை இஸ்லாமியர்களின் பிரச்சைனையாக மே17 பார்க்கவில்லை தமிழனின் பிரச்சனையாக பார்கிறோம்" என்றார்.
இதில் முக்கிய சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தேசிய தலைவர் அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டு பேசினார். அதில் "இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத அடிப்படையில் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர், அவை சி.ஏ.ஏ சட்டமாகும். நாட்டில் பல பேர் பிரதமராக இருந்துள்ளனர். ஆனால் யாரும் மத அடிப்படையில் சட்டத்தை கொண்டு வரவில்லை. இந்த சி.ஏ.ஏ சட்டம் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. இதன் வாயிலாக பாஜக அரசு மதத்தின் அடிப்படியில் இந்தியாவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் மீது உள்ள வெறுப்பை வெளிபடுத்தியுள்ளார்.கடுமையான சட்டங்களை கொண்டு வந்து இஸ்லாமியர்களை மிரட்ட நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. இஸ்லாமியர்கள் அல்லாவை தவிர யாருக்கும் பயப்படமாட்டார்கள்.
இந்தியா முழுவதும் நடக்கும் போராட்டங்களை தூண்டப்பட்ட போராட்டங்கள் என்கிறார்கள், இது தூண்டப்பட்ட போராட்டமல்ல, இந்த போராட்டங்களுக்கு யாருடைய தலைமையும் இல்லை. இது மக்களின் போராட்டம். தமிழக முதல்வர் இமாம்களுக்கு 1500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இரு சக்கர வாகனம் வழங்க மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான நிதி உதவிகள் ஜமாத் அமைப்புகளால் வழங்க முடியும். தமிழக முதல்வர் இஸ்லாமிய மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் என்.பி.ஆர் சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடை ஆணை பெறுங்கள். அப்போது உங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன்" என்றார். இந்த கூட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.