குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களை தாக்கியதை கண்டித்து திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள்.
![caa rally in dindigul](http://image.nakkheeran.in/cdn/farfuture/TfMRDs-aghtz_n5DtcZGXfy-zQpMGPaWyXaVAyL7j1o/1582117292/sites/default/files/inline-images/fxgbnfxg.jpg)
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும் மத்திய அரசு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழகத்திலும் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்பினர் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பைபாஸ் பகுதியில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினரும் பெருந்திரளாக கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியும், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களை தாக்கியதை கண்டித்தும் குரல் கொடுத்தவாரே மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணி நடைபெற்ற இடத்தில சுமார் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்துக்குள் வராத அளவுக்கு கலெக்டர் அலுவலகம் முன் வாசலிலேயே பெருந்திரளான போலீஸாரை குவித்து தடுப்பு வளையங்களை வைத்திருந்தனர்.
அதையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த போராட்டக்காரர்கள் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி கலெக்டர் அலுவலகம் வரை வந்தனர். அப்பொழுது அங்கு பாதுகாப்புக்கு இருந்த மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து இதற்கு மேல் போகக்கூடாது என்று கூறினார்கள். அதைத் தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட முஸ்லிம்களும் அங்கேயே நின்று தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினார்கள். அப்பொழுது தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குரல் எழுப்பினர். அதன்பிறகு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த பேரணிக்கு தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் மௌலவி அப்துல் காதர் தாவூதி ஹஸ்ரத் தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சிபிஎம் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் திமுக நகர செயலாளரும், முன்னாள் நகர் மன்ற தலைவருமான பஷீர் அகமது உள்பட பலரும் கலந்து கொண்டனர்.