Skip to main content

சேலத்தில் அரசுப்பேருந்து - கல்லூரி பேருந்து மோதல்; 30 பேர் பலத்த காயம்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலம் அருகே, இன்று காலை அரசுப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 

bus accident in  salem

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து வியாழக்கிழமை (அக். 10) காலை, அரசு நகரப் பேருந்து ஒன்று சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது, சேலம் - ஆத்தூர் புறவழிச்சாலையில் இருந்து உள்சாலைக்கு பேருந்து திரும்பியது.

அந்த நேரத்தில் அதே சாலையில் ராமலிங்கபுரத்தில் உள்ள ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி பேருந்தும் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசுப்பேருந்தின் முகப்பு அருகே பக்கவாட்டு பகுதியில் கல்லூரி பேருந்து பலமாக மோதியது.


 

bus accident in  salem

 

இந்த விபத்தில், தனியார் கல்லூரி பேருந்தின் முன்பக்கம் நசுங்கியது. அரசுப்பேருந்தும் பெருத்த சேதம் அடைந்தது. கல்லூரி பேருந்தில் இருந்த மாணவர்களும், அரசுப்பேருந்தில் இருந்த பயணிகளும் பலத்த காயம் அடைந்தனர். விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அலறினர். மாணவர்கள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த  காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையில் காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

mm

 

மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளும் அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. விபத்து காரணமாக சேலம் - சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து காரிப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்