தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதில் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் மூட்டைகள் நனைந்து நாசமாவது வழக்கமாகிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதிக்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கை ஏற்று அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி திறந்து வைத்தார். அதன்பிறகு தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் உம்பன் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழையில் அன்னவாசல் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி உள்ளது. மேலும் பள்ளத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து சேதமடையும் நிலை உருவாகி உள்ளது.
அரசு பணத்தில் விவசாயிகளிடம் வாங்கும் நெல்லை பாதுகாப்பாக வைக்கத் தெரியாமல் பல நூறு நெல் மூட்டைகளை நாசம் செய்து விட்டார்களே என்று விசாயிகள் கவலைப்படுகின்றனர்.