![Bump for NLC Chairman - People in angry](http://image.nakkheeran.in/cdn/farfuture/B_xISNhy__qV6hnN12qalmxvNb3zUMZRfx2ofloTxpE/1670245571/sites/default/files/inline-images/th_3518.jpg)
என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்கள் திண்டாடும் வேளையில் என்.எல்.சி சேர்மனுக்காக குத்தாட்டமாடி கொண்டாடுவதா என அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, கடந்த 1957ஆம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு வருகிறது. பழுப்பு நிலக்கரி வெட்டுவதற்காக 69 கிராமங்களைக் கையகப்படுத்தி சுமார் 25 ஆயிரம் குடும்பங்களை காலி செய்து, நவரத்னா என்ற அந்தஸ்துடன் மாபெரும் பொதுத்துறை நிறுவனமாக, என்.எல்.சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.
அதேசமயம் 3 சுரங்கங்கள் அமைவதற்காக கடந்த 50 ஆண்டு காலமாக தங்களது வீடு, நிலங்களை கொடுத்துவிட்டு தற்போது வரை நிரந்தர வேலை கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் போராடிவரும் நிலையில், மீண்டும் புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 27 கிராமங்களில், 12,125 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன், தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்.எல்.சி.
நிலம் மற்றும் வீடுகளை கொடுத்துவிட்டு, என்.எல்.சி நிர்வாகத்திடம், துப்புரவு பணியாவது கிடைக்குமா எனக் கடலூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வழங்கப்பட்டு வருவதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த காலங்களில் ஏமாற்றப்பட்டு, எத்தனையோ போராட்டம் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
![Bump for NLC Chairman - People in angry](http://image.nakkheeran.in/cdn/farfuture/LlN2ARAgSc6Bhz8yAvLiD6iIRhzdks0OXc_1LJzYDAM/1670245594/sites/default/files/inline-images/th-1_3563.jpg)
இந்நிலையில், தற்போது தொழிலக பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சுரங்க பகுதிக்குள் ஆடல் பாடலுடன் குத்தாட்டம் ஆடி கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் கடலூர் மாவட்ட மக்களை கடும் கோபம் அடைய வைத்திருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு என்.எல்.சி நிறுவனத்தில் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்குமார் என்பவர் நிதித்துறை இயக்குநராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல், என்.எல்.சி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநராக ராகேஷ்குமார் இருந்து வரும் நிலையில், வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி அவர் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற உள்ள என்.எல்.சியின் முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமாரை, குஷிப்படுத்துவதற்காக, என்.எல்.சி அதிகாரிகள், பிரிவு உபச்சார விருந்து விழா சுரங்க பகுதியில் நடத்தும் வீடியோதான் அது.
அந்த வீடியோவில், பெண்களைக் கொண்டு ஆடல் பாடல் கச்சேரி நடத்திக் கொண்டாடுவதுடன், அரைகுறை ஆடையுடன் பெண்கள் போடும் குத்தாட்டத்தையும் அதிகாரிகள் கண்டு களிக்கின்றனர்.
என்.எல்.சிக்காக நிலம் மற்றும் வீடுகளை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்து வரும் அப்பகுதி மக்கள், வீதியில் போராடிவருகின்றனர். நிரந்தர வேலை வேண்டும் என பல்வேறு கட்சியினர் குரல் கொடுத்துவருகின்றனர். ஆனால், இதை எதையும் காது கொடுத்துக் கூட கேட்க முடியாத என்.எல்.சியை ஆக்கிரமித்துள்ள வட மாநில அதிகாரிகள் மற்றும் வட மாநிலத்தவர்களை குஷி படுத்தும் வகையில் ஹிந்தி பாடல்களையும் பாடி, பாடல்களுக்கேற்றவாறு நடனமாட வைத்தும் கோலாகலமாகக் கொண்டாடுவது அப்பகுதி மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.