சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டிக்கு அருகே அமைந்துள்ளது ராமகவுண்டனூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனக்குச் சொந்தமான பகுதியில் வேற்றுகிரகவாசி எனப்படும் ஏலியனுக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். ஏலியன் சித்தர், கைலாய சிவன் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்குத் தினந்தோறும் பக்தர்களும் வந்து ஏலியன் தரிசனம் செய்கின்றனர்.
இந்த ஏலியனுக்கு கோயில் கட்டும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதரின் ஜீவசமாதிக்கு அருகே ஏலியன் சித்தர் மற்றும் அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து லோகநாதன் கூறுகையில், “உலகத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான். மனிதர்களைப் போலவே ஏலியன்களுக்கும் பல ரூபங்கள் உள்ளது. இது முழுக்க முழுக்க ஏலியன்களின் அனுமதி பெற்றுத் தான் இந்த கோயிலைக் கட்டினோம். எலியன்களுடைய வருகை அதிகமாகுமே தவிர இனிமேல் குறையாது. அதே போல், ஏலியன்களால் நமக்கு எந்த தீங்கும் நடக்காது" என அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசினார்.
அதுமட்டுமின்றி, தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வருவதால், குறைந்த அளவிலான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அவ்வபோது சில நடிகைகளுக்கு சில வைத்து ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தற்போது ஏலியனுக்கு கோவிலே கட்டும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.