புதுச்சேரி மாநிலத்தின் பதினான்காவது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரையை தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி ஏப்ரல், மே, ஜுன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்காக 2,468 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியாமல் புதுச்சேரி பேரவைக்கு பாஜகவை சேர்ந்த 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம் தாங்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவும், இருக்கை ஒதுக்கவும் கோரி பா.ஜ.கவை சேர்ந்த சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மூன்று பேரும் நுழைவாயில் முன்பாக போராட்டம் நடத்தினர்.
அதேபோல் முன்னதாக கவர்னர் கிரண்பேடி உரை நிகழ்த்த தொடங்கியதும், அப்போது பச்சை துண்டை தங்களது தலையில் போட்டபடி சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரன்பேடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து ஆளுநர் உரையில் வீட்டுவசதி, குறைந்த செலவில் மருத்துவ சேவை, பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்படை வசதி ஆகியவற்றை அளிப்பதன் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் நடப்பாண்டிற்கான திட்ட செலவினம் 2 ஆயிரத்து 334 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2016-17ம் ஆண்டு திட்ட செலவினங்களை விட 11.67 விழுக்காடு அதிகமாகும். மேலும் புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 2017-18ம் ஆண்டில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 124 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் இது சென்ற ஆண்டைவிட 8.89 விழுக்காடு அதிகம் . உள்ளிட்ட 58 அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன.
அதேசமயம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறி வந்த முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருவதாகவும், அறிவித்த திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை என கூறி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் நியமனம் எம்.எல்.ஏக்கள் விவகாரத்தால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய சட்டசபை கூட்டத்தொடர் மூன்று மணி நேரத்தில் முடிந்தது. சபாநாயகர் வைத்திலிங்கம் காலவரையின்றி கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.