!['Bucket, Jackfruit'-OPS asking symbol](http://image.nakkheeran.in/cdn/farfuture/hUrOOWwR0KawCERoPsDTpYEhi9HtowYoB0dfgncyCqU/1711420162/sites/default/files/inline-images/a5727.jpg)
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் ஓ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''சின்னங்களை காட்டிலும் போட்டியிடுகின்றவரின் அரசியல், கடந்த கால வரலாறு, அந்த வரலாற்றின் அடிப்படையில் அவர் எந்த மாதிரியான மக்கள் பணிகளை நிறைவாக செய்திருக்கிறார் என்பதை மக்கள் பார்த்து தங்களுடைய உயர்ந்த மரியாதையான வாக்குகளை அளிப்பார்கள். ராமநாதபுரத்தைப் பொறுத்தவரையில் மக்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும், கடந்த காலங்களில் நிறைவேற்றப்படாத திட்டங்களை செயல்படுத்துவதற்கும் குறிப்பாக கச்சத்தீவு போன்ற பிரச்சனைகள், கடலோர மாவட்டங்களில் வசிக்கின்ற மீனவப் பெருமக்கள் அனுபவித்து வந்த துயரங்களை எல்லாம் களைவதற்கு மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வந்து என்னுடைய கடமையாற்றுவேன்.
எங்கள் இயக்கத்தில் நடந்த அசம்பாவிதங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஜனநாயக விரோத செயல்களில் எந்த அளவுக்கு கொண்டு போய் அவர்கள் நிறைவேற்றினார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அத்தனை சட்ட பிரச்சனைகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறது. முழுமையாக விசாரித்து உயர் நீதிமன்றத்தினுடைய சிவில் சுய்ட் விசாரித்து தீர்ப்பு வருகிற பொழுது நியாயமான எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பக்கெட், பலாப்பழம், திராட்சை பழம் ஆகிய மூன்று சின்னங்களை கேட்டுள்ளேன்'' என்றார்.