கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள ஆதனூர் கிராமத்திற்கும் - நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே சுமார் நானூறு கோடி செலவில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத்தில் 110விதியின்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொறுபேற்ற எடப்பாடி அரசு அதற்கான அடிப்படை பணிகளைகூட துவங்கவில்லை.
கொள்ளிடம் ஆற்றில் ஜெயலலிதா அறிவித்த தடுப்பணைய உடனே கட்ட நடவடிக்கை எடு என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பினர், கொள்ளிடம் ஆற்றின் பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் குறித்து இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாய சங்கத்தை சார்ந்தவர்கள் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறிவருகிறது என்றும் உடனே தடுப்பனை கட்டவேண்டும் என்று ஆதனூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி செங்கல்லுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கையில் செங்கற்களை ஏந்திகொண்டு தடுப்பணை கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.