கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணக்காடு, குரங்குக்கொம்பு, குரங்கணி பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,
கிராமத்தை தத்தெடுக்கிறோமோ இல்லையோ, காப்பற்ற வேண்டியது எங்கள் கடமை. இதில் எந்த பிசகும் இல்லாமல் அவர்களுக்கு சேர வேண்டியதை அரசு செய்துகொடுக்க வேண்டும் என்பதே எங்கள் வலியுறுத்தல், எங்களுடைய பரிந்துரை. நான் பார்த்த வரைக்கும் இந்த பகுதிகளிலெல்லாம் இன்னும் அதிகாரிகள் வரவில்லை. பல இடங்களிலும் அப்படியேதான் சொல்கிறார்கள் இதைவிட பெரிய வேலை எதும் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. தயவுசெய்து வந்திருங்க என்பதுதான் எங்களது வேண்டுகோள். கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஏன் கலந்துகொள்ளவில்லை என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கமல் இவ்வாறு பதிலளித்தார்.
இது எனக்கு ரொம்ப முக்கியமாக தெரிந்தது. இன்னும் பல விழாக்கள் அவர் பெயரால் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இவர்களது வாழ்க்கை அன்றாடம் நகர்ந்துகொண்டிருப்பது, அதை பார்க்கவேண்டும். அதை ஊடகங்களின் வாயிலாக முன்னிறுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு கருவியாக இருக்கேன் அவ்வளவுதான்.
சேதமடைந்த வீடுகளை மறுசீரமைக்க வேண்டுமென்றால் 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக அங்கிருந்த மக்கள் கூறினர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கு ஃபோன் செய்த கமல். வணக்கம் நான் கமல்ஹாசன் பேசுறேன். வீடு கட்டுவதற்கு ஒரு திட்டம் இருக்குங்க 1.70 இலட்சத்துல. அந்த திட்டத்திற்கு நீங்கள் ஒப்புதல் தர 50,000 முன்பணம் தரணும் அப்படினு எதும் இருக்கா. அப்படியெல்லாம் எதும் இல்லையே. இங்க வந்து யாரோ கேட்டிருக்காங்க போல இருக்கு. அப்படி கேக்காம பாத்துகோங்க தயவுசெய்து. நாங்களும் பாத்துட்டு இருக்கோம். எனக் கூறினார்.