
கடலூர் மாநகரில் உள்ள பழைய வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(62). இவரது உறவினர் தண்டபாணி. இவர், கடந்த 2016ம் ஆண்டு இறந்தார். அப்போது கடலூர் நகராட்சியாக இருந்தது. இந்நிலையில், தண்டபாணியின் இறப்பு சான்றிதழைக் கேட்டு அவரது உறவினர் குணசேகரன் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக ராமன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் 3000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என குணசேகரனிடம் கூறியுள்ளார். இது குறித்து குணசேகரன், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கவனத்திற்கு கொண்டு சென்றார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், குணசேகரனிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அதனை, இளநிலை உதவியாளரான ராமனிடம் கொடுக்கச் சொன்னார்கள். அதுபோலவே குணசேகரன், ரசாயனம் தடவிய பணத்தை ராமனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணை முடிவடைந்து, நீதிபதி பிரபாகர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், நகராட்சி அலுவலக இளநிலை உதவியாளர் ராமன் இரக்கமற்ற முறையில் இறந்து போனவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்றவாளி ராமனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.